தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடும் பணிச்சுமை: மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை உடனடியாக நடத்த கோரிக்கை

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை உடனடியாக நடத்திட மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.

மருத்துவ மாணவர்கள்
மருத்துவ மாணவர்கள்

By

Published : Nov 30, 2021, 1:38 PM IST

சென்னை: தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கணபதி கூறியதாவது, "நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி, அதிக பாதிப்புகளை உருவாக்கியது. இதனால், ஜனவரி 10ஆம் தேதி நடக்கவிருந்த முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் (NEET PG) நுழைவுத் தேர்வு ஏப்ரல் 18ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

கரோனா மேலும் தீவிரமாகப் பரவியதன் காரணமாக ஏப்ரல் 18ஆம் தேதியும் நடத்தப்படவில்லை. மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு, பல மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 11ஆம் தேதிதான் நடத்தப்பட்டது.

1 லட்சம் மாணவர்கள் காத்திருப்பு

இத்தேர்வின் முடிவுகளும் வெளிவந்துவிட்டன. ஆனாலும் இதுவரை கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இந்த முதுநிலை மாணவர் சேர்க்கைக்காக 1.75 லட்சம் மருத்துவ மாணவர்கள், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர்.

முன்னேறிய வகுப்பிலுள்ள, பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இவ்வழக்கின் தீர்ப்பு காலதாமதமானதால் மாணவர் சேர்க்கை மேலும் காலதாமதமாகிறது. இதனால், முதுநிலை நீட் தேர்வை எழுதியவர்கள் விரக்தியில் உள்ளனர். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

மாணவர்களுக்கு கடும் பணிச்சுமை

முதலாம் ஆண்டு மாணவர்கள் இதுவரை படிப்பில் சேராததால், ஏற்கனவே முதுநிலை மருத்துவம் பயிலும் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கடும் பணிச்சுமைக்கு உள்ளாகியுள்ளனர். உடல், உள ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

கரோனா இரண்டாவது அலை, கரோனா தடுப்பூசி போடும் பணி, மழை வெள்ளம், டெங்கு போன்ற தொடர் பிரச்சினைகளால் தொடர்ந்து கடுமையாகப் பணியாற்றிவருகின்றனர். அதன் காரணமாக அவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, தீர்ப்பை விரைவுப்படுத்தி மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்திட வேண்டும். முதலாம் ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவர்கள் இல்லாத கல்வியாண்டாக (zero academic year), இந்த ஆண்டு மாறக்கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையிலும் இதே நிலை ஏற்பட்டுவருகிறது.

இந்தக் காலதாமதத்தைப் போக்கிட மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்திடக் கோரி, அகில இந்திய அளவில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் நடத்தவுள்ள பலகட்டப் போராட்டங்களுக்குத் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கமும் ஆதரவளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details