சீனாவில் தோன்றி உலகின் பல நாடுகளுக்கும் பரவிய கொவிட்-19 (கொரோனா வைரஸ்) தற்போது இந்தியாவுக்குள்ளும் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திய அரசு, மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரையையும் மேற்கொண்டுவருகிறது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி, சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் மக்களிடம் கொரோனா பாதிப்பு குறித்து விளக்கம் அளித்துவருகின்றனர்.
அந்த வகையில் தற்போது மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள கொரோனா வைரஸ் கண்காணிப்பு குறித்தத் தகவலில், ”உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஏற்பட்ட கொவிட் 19 வைரஸ் பாதிப்புகள் 105 நாடுகளில் உள்ளது என அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு இந்த நோய் வராமல் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.
வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் வரும் அனைத்துப் பயணிகளுக்கும் இந்தியாவில் 30 விமான நிலையங்களில் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நான்கு விமான நிலையங்களில் தற்போது (மார்ச் 10ஆம் தேதி) 1 லட்சத்து 40 ஆயிரத்து 64 பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 1,225 பயணிகள் வீட்டில் 28 நாள்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.