சென்னை: மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு, 1965ஆம் ஆண்டு மொழிப்போரில் உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் வீரர் அரங்கநாதன் நினைவிடத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜன.25) மரியாதை செலுத்தினார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரங்கநாதன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியதை செலுத்தினார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகளுக்கு திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கூட்டம் சேர்க்காமல் மரியாதை செலுத்தப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று மாலை மொழிப்போர் வீரவணக்க நாள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை
தமிழ்நாட்டில் கரோனா இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவுக்கு சென்று சிகிச்சை பெறும்போது இறப்பு ஏற்படுகிறது. ஆனால் கரோனா மற்றும் ஒமைக்ரானால் ஏற்படும் இறப்பு என்பது குறைவாகத்தான் உள்ளது.
பொங்கல் விழாவையொட்டி மாநகர பகுதிகளில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சென்று திரும்பி உள்ளதால், அடுத்த மூன்று நாள்களில் தொற்றின் பரவலின் உண்மை நிலை குறித்து தெரியவரும். அண்டை மாநிலங்களில் தொற்று அதிகரித்து காணப்பட்டாலும் தமிழ்நாடு முதலமைச்சரின் தீவிர நடவடிக்கையால் பாதிப்பின் தீவிரம் குறைந்து காணப்படுகிறது.
தடுப்பூசி போன்ற தடுப்பு நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கிறது. கரோனா பரிசோதனைக்கு வருபவர்கள் சரியான தகவல்களை தெரிவிக்க வேண்டும்.
அது அவர்களின் கடமை. கண்காணிப்பை தவறாக புரிந்துகொள்ளக் கூடாது. தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் நலனுக்காகவே கண்காணிக்கப்படுகின்றனர். தொற்று பரவல் குறைந்தால் நிச்சயம் ஊரடங்கு தேவையில்லை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா பரிசோதனையில் போலி தொலைபேசி எண்கள்..மாநகராட்சிக்கு புதிய சிக்கல்