சென்னை: தமிழ்நாடு அரசு பொது மக்களுக்கு கரோனா தடுப்பூசி (Corona Vaccination)செலுத்துவது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மாநகராட்சி மருத்துவமனையில் இலவசமாக தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 18 முதல் 44 வயது வரையுள்ள ஒரு கோடி பேர், இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்டோரில் 60 லட்சம் பேர், இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தவில்லை. அதேபோல் 72 லட்சம் பேர் இதுவரை இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறை வேண்டுகோள்
மொத்தமாக, இதுவரையிலும் 75 விழுக்காடு பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். தொடர்ந்து இன்று (நவம்பர் 21) நடைபெற உள்ள சிறப்பு முகாமில் மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தடுப்பூசி செலுத்தாதது தங்களை சுற்றியுள்ள நபர்களுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும். இதனால் மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும். இன்று(நவம்பர் 21) நடைபெற உள்ள சிறப்பு தடுப்பூசி முகாமினை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:CSK FELICITATION CEREMONY: தோனி சென்னையின் செல்லப்பிள்ளை - மேடையில் தோனி புகழ்பாடிய முதலமைச்சர்