சென்னை:தமிழ்நாட்டில் உள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான ஊதியம் கிடையாது என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி உள்ளிட்ட எட்டு பாடங்களில், பகுதி நேர ஆசிரியர்களாக, 12 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். மாதம் தொகுப்பூதியமாக இவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.
தி.மு.க தேர்தல் அறிக்கையினை முன்னிறுத்தி, மே மாதம் சம்பளம் வழங்க வேண்டும் என்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும் பல்வேறு போராட்டங்களை பகுதி நேர அரசு ஊழியர்கள் நடத்தினார்கள். மேலும் இது குறித்து பகுதி நேர ஆசிரியர்கள் தமிழ்நாடு முதல்வருக்கும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது என தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்ட அறிக்கையால் பகுதிநேர அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:’நாங்கள் தவறை ஒப்புக் கொள்கிறோம்’ - தமிழக மாணவர்கள் தேசிய போட்டிகளில் பங்கேற்காதது குறித்து அமைச்சர் விளக்கம்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்க வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமாரின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அவர், “பணியில் சேர்ந்த 2012-ஆம் ஆண்டு முதல் 12 மே மாதமும் சம்பளம் வழங்க வில்லை. இதனால் பகுதி நேர ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் ருபாய் 90ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. பணியில் சேரும்போது விடுமுறை காலமான மே மாதம் சம்பளம் இல்லை என உத்தரவு எதுவுமே கிடையாது. 2021-ம் ஆண்டு தான் இனிமேல் மே மாதம் சம்பளம் கிடையாது என திருத்தம் செய்தனர்.
இந்நிலையில் தான் திமுக, ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்தும் இன்னும் பணி நிரந்தரம் செய்யவில்லை. சம்பள உயர்வு கூட வழங்க வில்லை. அதிமுக அரசு போல், திமுக அரசும் மே மாதச் சம்பளத்தை மறுத்து வருகிறது. மனிதநேயத்துடன் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை தீர்க்க வேண்டுகோள்” விடுத்துள்ளார். இது குறித்து பகுதி நேர ஆசிரியர்கள் தமிழ்நாடு அரசிற்கு மீண்டும் இந்த அறிக்கையை பரீசிலத்து திரும்பப் பெறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெலிகாப்டர் ரைடு! உற்சாகப்படுத்திய சத்தீஸ்கர் அரசு