கரோனா வைரஸால் மதுரை மாவட்டத்தில் ஏற்பட்ட உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கண்டறிய மற்றொரு விசாரணை தேவைப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொலைநோக்குப் பார்வை இல்லாமலும் நிர்வாக தவறுகளாலும் கரோனா பரவத் தொடங்கிய நாட்களிலிருந்து தற்போதுவரை லட்சக்கணக்கான உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு. ஜூன் 11ஆம் தேதியன்று, மக்கள் நல்வாழ்வுத்துறை, சென்னை மாநகராட்சி சார்பாக உயிரிழப்பு எண்ணிக்கையில் உள்ள வேறுபாட்டை கணக்கிடுவதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. ஆறு வாரகால மறு ஆய்வுக்குப் பிறகு, 444 கரோனா உயிரிழப்புகள் புதிதாகப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
மறைக்கப்பட்ட இந்த கரோனா மரணங்கள் வெளிப்பட்டதன் காரணமாக, ஜூலை10 வரை சென்னையில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் விகிதம் ஒரு விழுக்காட்டிலிருந்து 2.67 விழுக்காடாக மாறியது தெரியவந்துள்ளது. உறுதியான கட்டமைப்பு இருந்தும்கூட, சென்னையில் 63 விழுக்காடு உயிரிழப்புகளை அதிமுக அரசு மறைத்து மோசடி செய்துள்ளது என்றால் மற்ற மாவட்டங்களில் எத்தனை உயிரிழப்புகள் மறைக்கப்பட்டிருக்கும் என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
மதுரையில் ஏற்பட்ட கரோனா உயிரிழப்புகள் குறித்த தொடர் விசாரணையில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கைக்கும் மயானப் பதிவேடுகளில் உள்ள எண்ணிக்கைக்கும் முரண்பாடுகள் தெரிகின்றன. ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதலின் அடிப்படையில், அதிமுக அரசின் அலட்சியத்தால் மதுரையில் ஏற்பட்ட உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் கண்டறிய மற்றொரு விசாரணை தேவைப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.