சென்னை:இந்த வார இறுதி தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பகுதிகளுக்குக் கூடுதல் பேருந்துகளை இயக்கப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த வார இறுதி நாளான இரண்டாம் சனிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை தினமாக அமைந்துள்ளது.
அரசுத் துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள், நடுவில் திங்கள்கிழமை ஒரு நாள் விடுப்பு அல்லது வீட்டில் இருந்து வேலை பார்க்கும் (work from home) எடுக்கும் பட்சத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுப்பு கிடைப்பதால், சென்னையில் மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து இங்கு வேலை செய்பவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கும், சுற்றுலா செல்வதற்கும் மற்றும் ஆடி மாதம் கோயில் திருவிழாக்களுக்குச் செல்லவும் இருக்கிறார்கள்.
அதற்காக பொதுமக்கள் இதுநாள் (ஆகஸ்ட் 8 ) வரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து பயணம் மேற்கொள்ள ஆகஸ்ட் 11ஆம் தேதி அன்று 18,199 பயணிகளும், ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று 6,949 பயணிகளும் மற்றும் ஆகஸ்ட் 13 அன்று 4,514 பயணிகளும் என மொத்தம் 29,662 பயணிகள் ஆகிய தினங்களில் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள குறிப்பில், "பயணிகள் எந்த வித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி அன்று தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 500 பேருந்துகளும் மற்றும் ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் 200 பேருந்துகளும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கு 400 சிறப்புப் பேருந்துகளும் ஆக மொத்தம் 1,100 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 15ஆம் தேதி பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 12,257 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்புப் பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க: NLC-யில் உழவர்களுக்கு துரோகம் செய்துவிட்டு கனடாவிற்கு உல்லாசப்பயணம் சென்றார் எம்.ஆர்.கே.பி - ஜி.கே. மணி