சென்னை: பள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்படும் மாதிரிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்வதற்கான பயிற்சி கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்கு 2018ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வினை எதிர்கொள்வதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.
அதில் மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறாமல் இருந்ததால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டன. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் தனியார் கல்லூரியில் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தியது.
அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்தப் பின்னர் 2022ஆம் ஆண்டு முதல் தொழில்கல்வி படிப்பிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டன. அவர்களுக்கான கட்டணத்தையும் அரசே செலுத்தி வருகிறது. இந்த நிலையில் நன்றாக படிக்கும் மாணவர்களை பல்வேறுப் போட்டித்தேர்வின் அடிப்படையில் தேர்வுச் செய்தப் பின்னர், மாதிரிப் பள்ளிகளில் சேர்த்து பயிற்சி அளிக்கின்றனர்.
இவர்களுக்கு இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. அதில் 250 மாணவர்கள், தேர்ச்சி பெற்று முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். இவர்களை பாராட்டி சான்றிதழ்களையும், பரிசுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் அரசு மாதிரி பள்ளிகளில் பயின்று ஐஐடி (IIT), ஐஏஎஸ்சி (IASC), ஐஐஐடி (IIIT), தேசிய சட்டப் பள்ளி உள்ளிட்ட நாட்டின் முதன்மை உயர்கல்வி நிலையங்களில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்கள் பலர் 8ஆம் வகுப்பு, 9ஆம் வகுப்பு , 10ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் பயின்று, 11 மற்றும் 12ம் வகுப்பினை அரசு மாதிரி பள்ளிகளில் பயின்று தற்போது நாட்டின் முதன்மை உயர்கல்வி நிலையங்களில் சேர்ந்துள்ளனர்.