தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 8, 2020, 8:35 PM IST

ETV Bharat / state

என்.இ.பி 2020 குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமைத்த அரசு!

சென்னை : புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து ஆய்வுசெய்து அறிக்கை சமர்பிப்பதற்காக 13 பேர் கொண்ட வல்லுநர் குழுவொன்றை அமைத்துள்ளதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

என்.இ.பி 2020 குறித்து ஆய்வு செய்ய  வல்லுனர் குழுவை அமைத்த அரசு!
என்.இ.பி 2020 குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழுவை அமைத்த அரசு!

இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமர் வெளியிட்டுள்ள அரசாணையில், "மொழி கொள்கையை பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் தொடர்ந்து இரு மொழிக் கொள்கை பின்பற்றப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இருப்பினும், தேசிய கல்விக் கொள்கையை பள்ளிக்கல்வித்துறையில் அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வல்லுநர் குழுவின் தலைவராக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இருப்பார். பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் வல்லுநர் குழுவின் உறுப்பினர் செயலாளராக செயல்படுவார். நிதித்துறை சிறப்புச் செயலாளர் பூஜா குல்கர்னி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட மாநில திட்ட இயக்குநர் லதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநர் கவிதா ராமு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையர் முனிய நாதன் ஆகிய ஐஏஎஸ் அலுவலர்கள் உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், யுனிசெப் அமைப்பின் சமூக கொள்கை மற்றும் கல்வி அலுவலர் அகிலா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பஞ்சநாதம், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஜோதி முருகன், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் பாலசுப்ரமணியன், சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேந்தர் மரியஜூனா ஜான்சன், பள்ளிக்கல்வித் துறை முன்னாள் இயக்குநரும் சாரண சாரணியர் இயக்கத்தின் மாநில தலைவருமான இளங்கோவன், தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் சுந்தரபரிபூரணம் பட்ஷிராஜன், திருவண்ணா மலையைச் சார்ந்த சாகித்திய அகடமி விருது பெற்ற தமிழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வல்லுநர் குழு கீழ்கண்ட பணிகளை மேற்கொள்ளும் :-

தேசிய கல்விக்கொள்கை 2020 வடிவில் உள்ள அனைத்து அம்சங்களையும் ஆராயும்.

மாநிலத்தின் இருமொழிக் கொள்கையை தொடரும் வகையில் அறிக்கை அளிக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள குறுகிய நடுத்தர மற்றும் நீண்ட காலத்தில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யும். இது சம்பந்தமாக அரசாங்கம் கேட்கும் தகவல்களையும் அளிக்கும்.

வல்லுநர் குழு தனது ஆய்வுப் பணியை முடித்து ஓராண்டிற்குள் அதன் அறிக்கையை அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் அரசு முன்கூட்டியே ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது" என அதில் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details