சென்னை:தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து, உணவு பாதுகாப்பு துறை ஆணையர் கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டார். அதேபோல், புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து ஆண்டுதோறும் அரசாணை வெளியிடப்பட்டு வருகிறது. இந்த அரசாணையின் அடிப்படையில் விதிகளை மீறியதாக சில நிறுவனங்கள் மீது குற்ற நவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
இதனால், உணவு பாதுகாப்பு துறை ஆணையரின் தடை உத்தரவை எதிர்த்தும், அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளை எதிர்த்தும் வழக்குகள் தொடரப்பட்டன. தடையை மீறியதாக சேலத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட நோட்டீசை தனி நீதிபதி ரத்து செய்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து உணவு பாதுகாப்பு துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை நீதிபதிகள் சுப்பிரமணியன், குமரேஷ்பாபு அமர்வு விசாரித்தது. இந்த வழக்குகள் கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப்பொருளாக குறிப்பிடவில்லை என்றும், சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்தல் சட்டத்திலும் புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்துவது குறித்து மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இரு சட்டங்களும் புகையிலைப் பொருட்களுக்கு முழுமையாக தடை விதிக்க வழி செய்யவில்லை என்றும், அதேபோல் உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், ஆணையர் தனது அதிகாரத்தை மீறி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ஆணையரின் உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.