மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக 2019ஆம் ஆண்டுக்கான ஸ்மார்ட் ஹாகோதன் போட்டி சென்னைக்கு அடுத்த ஆவடி வேல் டெக் தனியார் கல்லூரியில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தெலங்கானா, கர்நாடகா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அபே ஜெரி, "தமிழ்நாட்டில் நான்கு மையங்களில் திறன் மேம்பாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. கோயம்புத்தூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மையமும் சென்னையில் இரண்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 250 குழுக்கள் பங்கேற்றுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து அதிகமான குழுக்கள் பங்கேற்று மற்ற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு கடும் போட்டியாக அமைந்துள்ளன” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு போட்டியாக உள்ளது! தமிழ்நாட்டில் இருந்து தரம் மிக்க கண்டுபிடிப்புகள் வருவது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், 5 நாட்கள் ஹாகோதன் போட்டி நிறைவுற்றதும் சிறந்த கண்டுபிடிப்புகளை கண்டறிந்து அவர்களுக்கு மத்திய அரசு நிதி உதவி செய்து அவற்றை எவ்வாறு வியாபாரமாக தொடங்க வேண்டும் என்பதை முடிவுசெய்ய உள்ளதாக கூறினார்.
மேலும், இந்த போட்டிகள் மூலமாக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள், அவர்களது மதிபெண்களைவிட புதிய கண்டுபிடிப்புகள் முக்கியம் என்பதை உணர வேண்டும். இளைஞர்கள் அதிகமாக உள்ள இந்தியா போன்ற நாடுகளில் மாணவர்கள் வேலை தேடுபவராக இல்லாமல், வேலை கொடுப்பவராக மாற வேண்டும் என்ற மனநிலை வரவேண்டும். இந்தியாவில் குறைந்த செலவில் சிறந்த தரமான தொழில்நுட்பம் கிடைக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார்.