சென்னை:டிஜிபி சைலேந்திரபாபு பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை. இவர் 1987ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. எம்எஸ்சி விவசாயம், எம்பிஏ, பிஎச்டி உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்தவர். சைபர் கிரைம் ஆய்வுப் படிப்பையும் முடித்துள்ளார். 1962ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி பிறந்த அவர், தனது 25வது வயதில் ஐபிஎஸ் அதிகாரியாக 1987ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எஸ்பியாக கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மற்றும் சென்னை அடையாறு துணை ஆணையர் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பணிபுரிந்தார். சந்தன கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக இருந்தபோது அதில் முத்திரை பதித்தவர்.
மேலும் சென்னை காவல் துறை வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றியபோது 2004ஆம் ஆண்டு கட்டப்பஞ்சாயத்து, ரவுடி மாமூலில் கொடி கட்டி பறந்த தாதாக்களான ‘காட்டான்’ சுப்பிரமணி, ‘கேட்’ ராஜேந்திரன், ‘பூங்காவனம்’ ராமமூர்த்தி, ‘மாட்டு’ சேகர், ‘டைசன்’ சேகர், ‘பாக்சர்’ வடிவேல் மற்றும் வீரமணி போன்ற ரவுடிகளின் கதைக்கு முடிவு கட்டினார்.
தற்போது சென்னையில் பெரிய ரவுடிகள் அந்த அளவுக்கு இல்லை என்றால், அதற்கு சைலேந்திரபாபுவின் ஆரம்பகால துணிச்சல் நடவடிக்கைகள்தான் காரணம் என காவல் துறையினரே கூறுகின்றனர். வடசென்னையில் 4 ஆண்டுகள் இணை ஆணையராக இருந்து முத்திரை பதித்தவர்.
2010ஆம் ஆண்டு நவம்பரில் கோவை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்றிய போது, பள்ளிச் சிறுவர்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மோகனகிருஷ்ணன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு சைலேந்திரபாபு வடக்கு மண்டல ஐஜியாக பதவியேற்றார்.
அதனையடுத்து, கடலோரப் பாதுகாப்பு குழுமக் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அவரைத் தேடி வந்தது. அங்கும் அவரது பணி பாராட்டுதலைப் பெற்றது. 2015ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் சூழ்ந்தபோது சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பள்ளிக்கரணை, போரூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் கடல் போல சூழ்ந்து கொண்டது.
உடனடியாக களத்தில் இறங்கிய சைலேந்திரபாபு, கடலோர பாதுகாப்பு குழும நீச்சல் வீரர்களுடன் வெள்ளக் களத்தில் குதித்தார். வெள்ளம் சூழ்ந்த இடங்களுக்கு நீந்தியே சென்று வீட்டுக்குள் சிக்கிய பலரை மீட்டது இன்னும் பாராட்டைப் பெற்றது. 3 ஆண்டுகள் அவர் தலைமையில் செயல்பட்டதால் கடலோர பாதுகாப்பு குழுமம் இதுவரை பெறாத புதிய பலம் பெற்றது.
தமிழ்நாடு முழுவதும் கூடுதலாக கடலோர பாதுகாப்பு குழும நிலையங்கள் தொடங்கப்பட்டன. கடலோர மாவட்டங்களில் மீனவர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் மூலம் கடலோர பாதுகாப்பு குழுமத்தை மேலும் பலப்படுத்தினார். அந்நிய நாட்டினர் தமிழ்நாட்டின் கடல் எல்லைக்குள் ஊடுருவ முடியாதபடி, தமிழ்நாட்டின் கடல் எல்லைகள் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கப்பட்டது.
கள்ளத்தோணியில் கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இலங்கைத் தமிழர்கள் நடுவழியில் கடலில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொள்ளும் சோக சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தன. கள்ளத்தோணி ஆசாமிகளை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சைலேந்திரபாபு, அவ்வாறு செல்பவர்களை அழைத்து விழிப்புணர்வு அளித்தார்.