சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.10) தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய அத்துறையின் அமைச்சர் மூர்த்தி, "வணிகவரித்துறை கடந்த 2022-23ஆம் நிதியாண்டில் வருவாயாக 1,33,540.70 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 27.22% அதிகம். இதில் மொத்த நிர்வாக செலவீனமாக 481.64 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட 3,809 ஆய்வுகளில் 510.03 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டில் 12 வரி ஏய்ப்பு இனங்களில் வங்கி கணக்குகள், சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. 217 போலி பட்டியல் தயாரித்தவர்கள் மற்றும் 49 பயனாளிகளின் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநில கருவூலத்தின் வருவாய் பங்களிப்பில் பதிவுத்துறை மூன்றாவது இடத்தில் உள்ளது. 2022-23ஆம் நிதியாண்டில் 34,41,248 ஆவணங்களை பதிவு செய்ததன் மூலம் 17,296.84 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24.32 சதவீதம் அதிகம் - பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் எண்ணிக்கையில் 14.78 சதவீதம் அதிகம்.
போலியான மற்றும் மோசடியான ஆவணத்தை ரத்து செய்ய உத்தரவிட பதிவுத்துறை தலைவருக்கு சட்டபூர்வ அதிகாரம், 2022ஆம் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 31-3-2023 அன்று நிலவரப்படி மாநிலம் முழுவதும் 2,650 பதிவு செய்யப்பட்ட சீட்டு நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் 2022-23ஆம் ஆண்டில் 16.43 கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாக ஈட்டி தரப்பட்டது.
மாநிலத்தில் மொத்தம் 3,504 உரிமம் பெற்ற முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் செயல்பாட்டில் உள்ளனர். சந்தைப்படுத்தக்கூடிய பத்திரங்கள் மூலமாக கடந்த நிதியாண்டில் 199 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. திருமணப் பதிவில் 3.62 கோடி ரூபாயும், சங்க பதிவில் 9.70 கோடி ரூபாயும், சீட்டுப்பதிவில் 16.43 கோடி ரூபாயும், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் மற்றும் பிற கட்டணங்கள் மூலமாக 19. 89 கோடி ரூபாயும் வசூல் செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக பிற இனங்களில் இருந்து 250 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. சேலம் கிழக்கு, காரைக்குடி, கோபிசெட்டிபாளையம், தாம்பரம் மற்றும் கோயமுத்தூர் தெற்கு ஆகிய மாவட்டங்களில் ஐந்து புதிய மாவட்ட பதிவாளர் அலுவலகம்(தணிக்கை) திறக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது, விரைவில் இந்த அலுவலகங்கள் செயல்பாட்டுக்கு வரும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ஆளுநர் சிறப்பு நிதியில் ரூ.11.32 கோடி வீட்டுச்செலவு கணக்கிற்கு மாற்றம்" - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்!