சென்னை:தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தொழில் துறையை மேம்படுத்துவதில் அக்கறை காட்டி வருகிறது. தமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை அடையும் நோக்கில், உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாட்டு தொழில் துறை பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான குழு முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய், அபுதாபி நாடுகளுக்குப் பயணம் சென்றது. அதில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. துபாயைச் சேர்ந்த நோபுள் ஸ்டீல்ஸ் நிறுவனம், ஒயிட் ஹவுஸ் நிறுவனம், டிரான்ஸ்வேர்ல்டு குழுமம் ஆகியவற்றுடன் தொழில் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாய் அமைச்சர்களுடன் ஆலோசனை
அதேபோல், கடந்த 11ஆம் தேதி, ஹூண்டாய் நிறுவனத்துடன் தமிழக அரசு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டது. ஹூண்டாய் நிறுவனம் சார்பில் தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் 100 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை நெடுஞ்சாலைகளில் அமைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.