சென்னை:கடந்த சில நாள்களாக ரஷ்ய நாட்டு ராணுவம் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதால் அங்குப் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. உக்ரைனில் உயர் கல்வி பயில்வதற்காகச் சென்று தங்கியுள்ள தமிழ்நாடு மாணவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஸ்டாலின், ஏற்கனவே கடிதம் வாயிலாக வேண்டுகோள்விடுத்திருந்தார்.
இந்நிலையில் அங்கு நிலவிவரும் போர்ச் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு உடனடியாகத் தாயகம் திரும்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்களும் தமிழ்நாட்டில் வாழும் அவர்களின் பெற்றோர்களும் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
மாணவர்களை உடனடியாகத் தாயகம் அழைத்துவருவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அவ்வாறு உடனடியாக அழைத்துவருவதற்கான பயணச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களும் பெற்றோர்களும் தொடர்புகொள்வதற்கு உடனடியாக மாநில கட்டுப்பாட்டு அறையில் இதற்கென தனிக் குழு ஏற்படுத்தப்பட்டு, வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையர் தலைமையில் குழுவின் தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் மாணவர்களுக்குத் தைரியம் சொன்ன ஸ்டாலின்
உக்ரைனில் உள்ள தமிழ்நாடு மாணவர்களுடன் வீடியோ அழைப்பில் பேசிய முதலமைச்சர்.. இந்நிலையில், உக்ரைன் நாட்டில் தற்பொழுது தங்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களான ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி, மௌனி சுஜிதா, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன், ஆண்டனி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன், நவநீத ஸ்ரீராம் ஆகியோரை ஸ்டாலின் காணொலி அழைப்பு வாயிலாகத் தொடர்புகொண்டு அங்குள்ள நிலவரம் குறித்துக் கேட்டறிந்தார்.
மேலும், அவர்களை மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது என்றும், தாங்கள் இருக்கும் இடத்தில் பாதுகாப்பாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வின்போது, உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பொதுத்துறைச் செயலாளர் முனைவர் டி. ஜெகந்நாதன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: உக்ரைனில் உள்ள மாணவர்களை அழைத்துவர இந்திய தூதரகம் நடவடிக்கை