சென்னை:Omicron spreads :பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், நாள்தோறும் வெளிநாட்டுப் பயணிகளின் வருகை மற்றும் ஒமைக்ரான் குறித்த விவரங்களை தினசரி அறிக்கையில் கூடுதலாக வெளியிட முதலமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், ஒமைக்ரான் வகைக் கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சர் ஆய்வு:
தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24ஆம் தேதி ஒமைக்ரான் பரவலைத் தடுக்க, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் இதர துறைகளுடன் இணைந்து எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதன்தொடர்ச்சியாக இன்று ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையத்தினைப் பார்வையிட்டு, அங்கு கோவிட் நோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் குணப்படுத்த ஏற்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார்.
மேலும், தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள அவசரகால ஆக்சிஜன் சிலிண்டர் சேமிப்புக் கிடங்கினையும், உயிர் காக்கும் அவசர சிகிச்சை உபகரணங்களுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களையும் பார்வையிட்டார்.
பின்னர், 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அவசர கால அழைப்பு நிலையம், அவசரகால கட்டுப்பாட்டு அறை மற்றும் மாநில கட்டளை மையத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தேவையான அறிவுரைகளை வழங்கினார். பின்னர் இந்த வளாகத்தில் செயல்பட்டு வரும் 24 மணிநேர கரோனா தடுப்பூசி மையத்தினையும் ஆய்வு செய்தார்.
ஒமைக்ரான் முன்னெச்சரிக்கை:
ஒமைக்ரான் வகைக் கரோனா நோய்த்தொற்று பரவலைத்தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1.15 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், தற்காலிக கோவிட் சிறப்பு மையங்களில் தேவைக்கேற்ப 50,000 படுக்கைகள் வரை ஏற்படுத்த ஆணை வழங்கப்பட்டு, அவற்றை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.