சென்னை ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொழில்கள் விதிமுறைகளுடன் தொடங்கவுள்ள நிலையில், தலைமை நிறுவனங்களைச் சார்ந்த பிரதிநிதிகளுடன் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் மூன்று நாள்கள் (ஜூலை 9 - ஜூலை 11) ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், வங்கிகள், ரேஷன் கடைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த சுற்றறிக்கையை அனைத்து அலுவலகங்களுக்கும் ஆணையர் பிரகாஷ் அனுப்பியுள்ளார்.
வங்கிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
• வங்கிகளுக்கு வரும் மக்கள் தகுந்த இடைவெளியுடன் நிற்பதற்கு தரையில் வட்டம் அல்லது சதுர வடிவில் குறிப்பிட்டு, இடைவெளியுடன் நிற்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
• வங்கிகளுக்கு பணம் எடுக்க வரும் நபர்களுக்கு டோக்கன் கொடுத்து, அதன்படி வங்கிகளுக்கு வரவழைக்க வேண்டும்.
• ஒரு வங்கியில் ஐந்து நபருக்கு மேல் உள்ளே அனுமதிக்கக் கூடாது.
• சிறுதொகை எடுப்பது, வங்கி புத்தகத்தை அப்டேட் செய்வது போன்ற சிறு காரியங்களுக்கு ஆன்லைன் மூலம் முடித்துக்கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும்.
• சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வங்கிக் கிளைகளின் ஏடிஎம்களிலும் பணத்தை நிரப்பிவைக்க வேண்டும்.
• வங்கிகளில் பணிபுரியும் அலுவலர்கள் முகவசம், கையுறை ஆகியவற்றைக் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
• விதிமுறைகளை மீறும் வங்கியின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ரேஷன் கடைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்
• கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு 2,000 குடும்ப அட்டைக்கு மேல் இருக்கும் ரேஷன் கடைகளை இரண்டாகப் பிரித்து இயக்க வேண்டும்.
• ரேஷன் பொருள்களை டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரங்களில் மட்டுமே வழங்க வேண்டும்.
• ரேஷன் கடைகளில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் கையுறை, முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
• ரேஷன் பொருள்களை வாங்கவரும் நபர்கள் முகக்கவசம் அணிந்து இருக்கிறார்களா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
• அனைத்து ரேஷன் கடைகளின் வெளியிலும் முகக்கவசம் அணியவில்லை என்றால் பொருள்கள் இல்லை என பலகை வைத்திருக்க வேண்டும்.
• ரேஷன் கடைகளில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் கபசுரக் குடிநீர், மாத்திரைகள் போன்றவை தவறாமல் அளிக்க வேண்டும்.
• மாநகராட்சியால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் மூலம் தினசரி ரேஷன் கடைகளில் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
• மாநகராட்சி சிறப்புக் குழு ஆய்வின்போது, விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழிற்சாலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
• அனைத்து தொழிற்சாலை பகுதிகளிலும் தகுந்த இடைவெளியுடன் பணிபுரிய இருக்கிறார்களா என உறுதிசெய்ய வேண்டும்.
• உடனடியாக தொழில்துறை சங்கங்கள் கூட்டத்தைக் கூட்டி கரோனா பரவலைத் தடுப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளை அக்கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.
• உடனடியாக ரியல் எஸ்டேட், கட்டடத் தொழில் சங்கங்களில் கூட்டத்தைக் கூட்டி கரோனா பரவலைத் தடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துரைக்க வேண்டும்.
• அனைத்து அலுவலர்களுக்கும் கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம், ஜிங்க் மாத்திரைகள் போன்றவை தொடர்ந்து வழங்க வேண்டும்.
• மாநகராட்சியால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளும். ஆய்வின்போது, விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படிங்க:இந்திய விமான பயணிகள் சங்கத்தின் தேசிய தலைவர் சுதாகர் ரெட்டி உயிரிழப்பு!