இது குறித்து தமிழ்நாடு மக்கள் செய்தித் தொடர்புத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு மொத்தம் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான பத்தாண்டு கால பிணைய பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்க முடிவுசெய்துள்ளது.
வருகின்ற ஜூன் 2ஆம் தேதி இந்திய ரிசா்வ் வங்கியின் மும்பை (கோட்டை) அலுவலகத்தில் இந்த ஏலம் நடைபெறவுள்ளது. இந்தப் பிணைய பத்திரங்கள் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய்க்கு ஏலம்விடப்படும். இது போட்டி ஏலமாகவும், போட்டியற்ற ஏலமாகவும் இரண்டு வகையில் நடத்தப்படவுள்ளது.
எனவே, இதில் ஆா்வமுள்ளவர்கள், நிறுவனங்கள், கூட்டமைப்புக் குழுமங்கள், நிதி நிறுவனங்கள், வருங்கால வைப்புநிதி நிறுவனங்கள், பொறுப்புரிமை நிதியங்கள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய ஊரக வங்கிகள் முதலானோர் ஏலம் கேட்கலாம்.
போட்டி ஏலத்தில் 2ஆம் தேதியன்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரையிலும், போட்டியற்ற ஏலத்தில் காலை 10.30 மணி முதல் 11.30 வரையிலும் பங்கேற்க நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது.