தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (பிப் 4) காலை 10:30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடக்கவுள்ளது.
கரோனா வைரஸ் இந்தியாவில் பரவிவருகின்ற நிலையில் கேரளா மாநிலமும் வந்தடைந்துள்ளது. இது தமிழ்நாட்டுக்குப் பரவுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே தொற்றிக்கொண்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இந்த வைரஸ் பரவாமலும், அதனை தடுக்கக்கூடிய வழிகள் குறித்தும் தமிழ்நாட்டின் மூத்த மருத்துவர்கள், சித்தா உள்ளிட்ட இயற்கை வைத்திய மருத்துவர்கள் தீவிரமாக ஆலோசித்துவருகின்றனர்.
இந்த நிலையில்தான் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் நாளை மறுநாளான்று முக்கிய விவகாரங்களுடன் சேர்த்து இந்தக் கொடிய கரோனா வைரஸ் குறித்தும் தீவிரமாக விவாதிக்கப்பட இருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், ஒருவேளை கரோனா தமிழ்நாட்டிற்குள் ஊடுருவினால் அதை எதிர்கொள்வது எப்படி எனவிளக்குவார் என்றும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.