சென்னை:தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த ஊரடங்கு தளர்வுகள் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தன. அதன்படி, புதுச்சேரிக்கு 70 நாள்களுக்குப் பிறகு பேருந்துகள் இயக்கப்பட்டன.
புதிய தளர்வுகள்
ஒன்றிய- மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகள் தொடர்பான எழுத்துத்தேர்வுகள் அரசு வழங்கியுள்ள நெறிமுறைகளுக்கு உள்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, இரவு 8 மணி வரை செயல்பட்ட கடைகள் இன்று முதல் இரவு 9 மணி வரை செயல்படலாம்.
தொடரும் தடைகள்
புதுச்சேரி நீங்கலாக மாநிலங்களுக்கிடையே தனியார், அரசு பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதி கிடையாது.
பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்களுக்குத் அனுமதி கிடையாது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இறுதிச் சடங்கில் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
வழிகாட்டு நெறிமுறைகள்
உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள் போன்றவற்றில், வாடிக்கையாளர்கள், கடைகளில் பணிபுரிவோர் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும். கடைகளுக்கு வெளியே கிருமி நாசினி தெளிப்பான் வைத்திருக்கவேண்டும்.
ஏசி உள்ள கடைகளில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும் வகையில் ஜன்னல்கள் திறந்து வைக்கப்படவேண்டும். தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவதை உறுதி செய்யவேண்டும்.
இதையும் படிங்க:மேகதாது அணை பிரச்னை தொடர்பாக இன்று அனைத்து கட்சிக் கூட்டம்