தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TN Budget: தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்; குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 அறிவிப்பு வெளியாக வாய்ப்பு! - தமிழக நிதிநிலை அறிக்கை

2023 - 24ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilnadu
Tamilnadu

By

Published : Mar 19, 2023, 9:01 PM IST

Updated : Mar 20, 2023, 6:09 AM IST

சென்னை: 2023 - 24ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று (மார்ச்.20) தாக்கல் செய்யப்படவுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் மூன்றாவது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதி நிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளார். அமைச்சர் தியாகராஜன் சுமார் 2 மணி நேரம் இந்த பட்ஜெட் உரையை வாசிப்பார் என தெரிகிறது.

இந்த பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் நிச்சயமாக இடம்பெறலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த பொது பட்ஜெட் மின்னணு வடிவில் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படவுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வேளாண் துறைக்காக தனியான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 2023 - 24ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை அந்த துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நாளை (மார்ச் 21) தாக்கல் செய்ய உள்ளார். இதனை தொடர்ந்து 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதம் நடைபெறவுள்ளது. விவாதத்தின் நிறைவு நாளில் நிதி அமைச்சர் பதில் அளிப்பார்.

பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். பட்ஜெட் மீதான விவாதத்துக்காக பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

மேலும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஏற்கனவே கூறியபடி, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் அரசுக்கு திருப்பி அனுப்பியதால், அந்த மசோதா மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்படும்.

கடந்த 2022-23ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மாநிலத்தின் கடன், 6.53 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் நிதிச்சுமை எவ்வளவு என்ற விபரமும் இன்றைய பட்ஜெட்டில் தெரிய வரும். சட்டப்பேரவை நிகழ்வில் ஈரோடு கிழக்கு தொகுதியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.

இதையும் படிங்க: தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கையில் மாற்றங்களை சேர்த்துக்கொள்ள நடவடிக்கை - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Last Updated : Mar 20, 2023, 6:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details