சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
அவர் உடலானது கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ளது. விஜயகாந்தின் உடலுக்கு பல நடிகர்கள், அரசியல் தலைவர்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கட்சித் தொண்டர்களால் கருப்பு எம்.ஜி.ஆர் என்று இன்றளவும் அழைக்கக்கூடிய அளவிற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் வழியில் நடந்து கொண்டவர், விஜயகாந்த். கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளையும் அவர் செய்திருக்கிறார். அதுமட்டுமல்லாது, தமிழகத்தில் இரு பெரும் கட்சிகள் இருக்கும் பொழுது, மூன்றாவதாக ஒரு தலைவர் உருவாக முடியும் என்று உண்மையில் நிரூபித்துக் காட்டிய ஒரு சிறந்த தலைவர்.