10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதற்கு அவர் விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படக்கூடிய வங்கி ஊழியர்கள், அரசின் இந்த முடிவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.
வங்கிகள் இணைப்பு நாட்டின் வளர்ச்சிக்கு உதவுமா, அல்லது வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்துமா என பொருளாதார வல்லுநர்கள் மண்டையை பிய்த்துக்கொண்டு விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் மாபெரும் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள அந்த அறிவார்ந்த ட்வீட்டில், வங்கிகள் இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்த பின்னரும், போராட்ட அறிவிப்பு ஏன்? என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல், போராட்டம்? போராட்டம்? என்றால் எப்படி வளரும் பொருளாதாரம்? என்ற கேள்வியை இந்திய சமூகத்தின் மீது வீசியுள்ள அவர், வேலைவாய்ப்புக்கு முதலீடு எப்படி வரும்? பொருளாதார சிரமங்களை சரிசெய்ய வேண்டாமா? என்பது போன்ற பொருளாதாரம் சார்ந்த லாஜிக்கல் கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
இதன்மூலம், தமிழிசையை வெறும் அரசியல் தலைவராகவும், மருத்துவராகவும் மட்டுமே அறிந்த தமிழ் சமூகத்துக்கு, அவர் ஒரு பொருளாதார வல்லுநர் என்பதையும் நாசூக்காக சொல்லியிருப்பதாக அவரது லட்சக்கணக்கான தொண்டர்கள் சிலாகிக்கின்றனர்.