இந்தி மொழி பேசாத மாநிலங்களில் பள்ளிக்கூடங்களில் மும்மொழிக் கொள்கையை கொண்டுவர கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை செயல்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் பல்வேறு கட்சிகள் தொடர் கண்டனம் தெரிவித்துவருகின்றன.
இந்த முடிவை கைவிடாவிட்டால் போராட்டங்கள் நடக்கும் என கட்சிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
'மும்மொழிக்கொள்கை கஸ்தூரி குழு அனுப்பியுள்ள பரிந்துரையை மத்திய அரசு இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
ஆனால் அதற்கு முன்பே இந்தி திணித்து விடுவதைப்போல ஸ்டாலின், வைகோ, முத்தரசன், சிதம்பரம் போன்றவர்கள் கூட கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றனர். இந்தி திணிப்பை காரணமாகக் கொண்டு சுயலாப போராட்டங்கள் நடத்தலாம் என ஆயத்தமாகிவருகிறார்கள்.
முன்னாள் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெளிவாகச் சொல்லிவிட்டார், எந்த மொழியும் எந்த மாநிலத்திலும் திணிக்கப்படாது. அதே போல் இன்றைய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நிஷாங்கும் இந்தி திணிக்கும் எண்ணமில்லை என்று கூறியிருக்கிறார். மும்மொழிக் கொள்கை என்பது பரிந்துரைத்தால் மட்டுமே கொள்கை முடிவல்ல.
காங்கிரஸ் முதலமைச்சர் பக்தவச்சலம் ஆட்சி காலத்தில்தான் இந்தி திணிப்பும், எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடந்தது. அதை எல்லாம் மறந்துவிட்டு இன்றைய காங்கிரஸ்காரர்கள் திமுகவுடன் சேர்ந்து இந்தியை எதிர்ப்பதாக சொல்கின்றனர்' என்று தெரிவிக்கப்பட்டது.