சென்னை:தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர் உடல், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ளது.
இந்நிலையில், அவரது உடலுக்கு பல நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், விமானம் மூலம் சென்னை வந்து அவரது உடலுக்கு அஞ்சலில் செலுத்தினார்.
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜயகாந்த் இறந்தார் என்ற செய்தி எனக்கு பேரிடியான செய்தியாகத்தான் உள்ளது. சொந்த சகோதரனை இழந்ததுபோல, மனதில் எனக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் மிகவும் நல்ல உள்ளம் படைத்த மனிதர். மேலும் அரசியலில் மிக துணிச்சல்மிக்க தலைவராக இருந்தவர்.
அரசியலில் இருக்கும் போதும், திரைத்துறையில் இருக்கும்போதும் அரசியல் முடிவுகளுக்காக பல முறை நான் அவரை தேமுதிக அலுவலகத்திற்கு வந்து சந்தித்துள்ளேன். இப்படி ஒரு நிலைமையில், நான் இங்கு வருவேன் என்று என் வாழ்நாளில் நினைக்கவில்லை. விஜயகாந்த், பிரதமர் நரேந்திர மோடியின் மீது மிகுந்த மரியாதை உடன் இருந்தவர்.
விஜயகாந்த் மறைந்த தகவலை அறிந்த பிறகு உடனடியாக மோடி இரங்கல் தெரிவித்தார். நல்ல நண்பர், நல்ல மனிதர், நல்ல திரைப்படக் கலைஞர், நல்ல அரசியல்வாதி. ஒட்டுமொத்தத்தில் நல்ல மனிதரை நாம் இழந்திருக்கிறோம்” என கூறினார்.