சென்னை: தெலங்கானா ஆளுநரும் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பொங்கல் ஒற்றுமையாக தமிழரின் பெருமையை உயர்த்துவதாகவும் இந்தியாவின் பெருமையை உயர்த்துவதாகவும் இருக்க வேண்டும்.
கரோனாவுக்குப் பிறகு அனைவரும் இணைந்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கிறோம். இவ்வாறு பொங்கல் கொண்டாடுவதற்கு இறைவன் ஆசியும், தடுப்பூசியும் தான் காரணம். சீனா உள்ளிட்ட நாடுகள் கரோனாவில் இருந்து வெளிவராத நிலையில் இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது. அதற்குக் காரணம் பிரதமர் மற்றும் முன்களப் பணியாளர்கள் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம். கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது, இணையதளங்களில் மிகவும் கீழ்த்தரமாக விமர்சிப்பது உள்ளிட்டவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
ஒரு சிலர் ஆளுநரைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். முதலமைச்சர் யாரையும் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லிய போதும் ஒரு சிலர் கடுமையாக விமர்சிக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டும். கருத்து வேற்றுமைகள் இருக்கலாம், ஆனால் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்க வேண்டும் என்பது தான் மரபு. கருத்து மோதல்கள் இருக்கலாம். கருத்து வேற்றுமை இருக்கலாம். ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும்.