சென்னை:பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6ல் அசீம் என்பவர் முதலாவது இடம் பிடித்து பட்டத்தை வென்றார். இந்தப் பட்டம் அசீமுக்கு வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகப் பல தரப்பினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6ல் அசீமுக்கு பட்டம் வழங்கியதில் முறைகேடாக நடந்திருப்பதாகக் கூறி இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளையில் உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தில் யூடியூபர் ஜோ மைக்கல் 24 கேள்விகள் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார். மேலும் இது தொடர்பாக அவரது சமூக வலைதளப் பக்கத்திலும் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக பிக் பாஸ் பிரபலம் அசீம் தூண்டுதலின்பேரில் அவரது ஆதரவாளர்கள் தனக்கு மிரட்டல் மற்றும் அவதூறு பரப்புவதாக யூடியூபர் ஜோ மைக்கல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜோ மைக்கல், “வழக்கமாக அனைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பொதுமக்கள் போன் கால் மூலமாக போட்டியாளர்களுக்கு வாக்கு செலுத்தலாம், ஆனால் பிக் பாஸ் 6ல் ஹாட்ஸ்டார் மூலமாக மட்டுமே வாக்கு செலுத்த வேண்டும் என்ற முறை கொண்டு வந்ததில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பலமுறை கமல்ஹாசனே அசீமை எச்சரித்து தக்க வைத்த நிலையில், அசீம் எப்படி முதலாவதாக பட்டம் பெற்றார் என்பதில் கேள்வி எழுகிறது. இதனால் இந்த முறைகேடு தொடர்பாக இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளையில் உள்ள தகவல் அறியும் சட்டத்தில் 24 கேள்விகளுக்கு தகவல் கேட்டு கடிதம் அனுப்பி இருக்கிறேன். அதில், அசீம் எவ்வளவு வாக்குகள் பெற்றுள்ளார்?, ரெட்கார்டு கொடுத்தபோதும் எலிமினேட் செய்யாமல் அசீம் இருந்தது எப்படி? என பல்வேறு கேள்விகள் கேட்டு அனுப்பி இருக்கிறேன்.