கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவர்கள் பங்களாதேஷ் நாட்டில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி கடந்த 28, 29ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
இதில் இந்தியாவில் இருந்து 80 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆல் இந்தியா கராத்தே டூ அசோசியேஷன் சார்பில் 7 மாணவர்கள் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு மூன்று தங்க பதக்கம், இரண்டு வெள்ளி பதக்கம், 3 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 8 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தனர்.
இதையடுத்து பங்களாதேஷில் இருந்து சென்னை வந்த வீரர்களுக்கு விமான நிலையத்தில் அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சியாளர் சீனிவாசன் கூறுகையில், 'தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஏழு மாணவர்களும் மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, 3 வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்து உலக அளவில் நடைபெறக்கூடிய கராத்தே போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்றுள்ள மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவியும், ஊக்கமும் அளிக்க வேண்டும். இது அவர்களின் அடுத்த கட்ட நகர்வுக்கு உதவியாக இருக்கும். கராத்தே போட்டிக்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை கொடுத்து, தமிழ்நாடு மாணவர்களுக்கு பயிற்சிகளை கொடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
தங்கப்பதக்கம் வென்ற சூர்யா கூறுகையில், “மொத்தம் எட்டு பதக்கங்களை வென்று உள்ளோம். எங்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கும் பயிற்சியாளருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவுக்காக பதக்கம் வெற்றி பெற்றது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. அனைத்து போட்டிகளும் மிகவும் கடினமாக இருந்தது. இருந்தபோதிலும் முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளோம்'' என்றார்.
தங்கப்பதக்கம் வென்ற வைபவி கூறுகையில், “தொடர்ந்து சர்வதேச அளவில் நடைபெறும் கராத்தே போட்டிகளில் பங்கேற்று தங்க பதக்கம் வெல்ல வேண்டும் என்பது எனது லட்சியம். கராத்தே ஒரு தற்காப்பு கலை. இதனை அனைத்து பெண்களும் கற்றுக்கொள்வது நல்லது” எனக் கூறினார்.
இதையும் படிங்க:விளையாட்டு விபரீதமாகும்... விளையாட்டு திடலில் பற்றி எரிந்த தீ....