சென்னை பல்லவன் சாலையில் உள்ள 24 மணி நேரமும் இயங்கும் கரோனா பரிசோதனை செய்யும் மையத்தை, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் கரோனா தடுப்பு சிறப்பு மேற்பார்வை அலுவலரும், வணிக வரித்துறை முதன்மை செயலாளருமான சித்திக் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதன் பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சித்திக், ’சென்னையில் 14 பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. கிட்டத்தட்ட 70 விழுக்காடு தொற்று பாதிப்பாளர்கள் வீட்டு தனிமையில் இருக்கின்றனர். ஓமந்தூரார், ராஜீவ் காந்தி இருமருத்துவமனைகளும் இணைந்து பல்லவன் சாலை பரிசோதனை மையத்தை உருவாக்கி உள்ளனர்.
மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளில் அறிகுறியுடைய, அவசர சிகிச்சை தேவைப்படாத நோயாளிகளை பரிசோதனைக்காக இங்கு அனுப்பி வைப்பர். நாள் ஒன்றுக்கு இங்கு ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள இயலும். ஏற்கனவே சென்னையில் 14 பரிசோதனை மையம் உள்ள நிலையில், மேலும் பல்லவன் சாலையையும் சேர்த்து 7 பரிசோதனை மையத்தை உருவாக்க உள்ளோம்.
வரும் நாட்களில் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் இது போன்ற கூடுதல் பரிசோதனை நிலையங்களை ஏற்படுத்துகிறோம். 280-இல் இருந்து 350ஆக அவசர ஊர்திகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல்லவன் சாலை பரிசோதனை மையம் 24 மணி நேரமும் வாரத்தில் 7 நாட்களும் இயங்கும்’என்றார்.
தொடர்ந்து பேசிய ஆணையர் பிரகாஷ்,’சென்னையில் தற்போது 619 முன்கள பணியாளர்கள் சிகிச்சையில் உள்ளனர். 90 விழுக்காடு முன்கள பணியாளர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். மொத்தம் 70 ஆயிரம் முன்கள பணியாளர்கள் பணியில் இருக்கின்றனர். ஊடகவியலாளர்களில் தேர்தலுக்காக பரிசோதனை மேற்கொண்ட 150 நபர்களில் ஒருவருக்கு மட்டுமே கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர முடியும்.