சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை அண்மைக்காலமாக தீவிரம் அடைந்ததுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் திருவள்ளூர், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் இன்று (டிச.2) காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தெற்கு அந்தமான் கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று வரை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்தது. இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலை கொண்டிருக்கிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதேபோல் சென்னையில் புறநகர் பகுதிகளான மதுரவாயில், திருவேற்காடு, பாடி, அம்பத்தூர், ஆவடி ஆகிய இடங்களில் காலை 6 மணி முதல் தொடர் கன மழையும், அண்ணாநகர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், முடிச்சூர், வண்டலூர் ஆகிய பகுதிகளில் லேசான முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. தற்போது வரை காசிமேடு பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலையில் தொடர் மழை பெய்ததால், ஜிஎஸ்டி சாலை, உள் வட்டசாலை, 100 அடி சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஓஎம்ஆர், ஈசிஆர், நெல்சன் மாணிக்கம் சாலை, பூந்தமல்லி, நெடுஞ்சாலை, அம்பத்தூர் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் காலை நேரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மேலும் காலை முதலே வானம் மேகமூட்டமாகவும், சாரல் மழை பெய்து இதமான சூழல் நிலவுவதால், சென்னையே ஒரு மினி ஊட்டி போல காட்சியளிக்கிறது.