சென்னை:தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது 132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இன்று(டிச.24) புதிதாக 29 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என பொதுச் சுகாதாரத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
கரோனா உருமாற்றம் அடைந்து பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்திலிருந்த பாதிப்பு கடந்த சில நாட்களாக தற்பொழுது இரட்டை இலக்கத்திற்கு மாறி வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பின் போது, தொண்டை வலி, அதிக காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். அவ்வாறு இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
மேலும் சளி, இருமல் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு நோய்த் தொற்று வரக்கூடாது என்பதற்காக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதுடன், முகக்கவசம் அணிந்து செல்வதும் நல்லது என பொதுச் சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் இன்று(டிச.24) வெளியிட்டுள்ள கரோனா பாதிப்புகள் குறித்த விவரங்களில், தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனைகள் புதிதாக 364 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் இதுவரையில் 7 கோடியே 10 லட்சத்து 209 பேர் பாதிக்கப்பட்டனர் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாவட்டத்தில் ஒரே நாளில் 14 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 பேருக்கும், காஞ்சிபுரம், திருவாரூர் மாவட்டத்தில் தலா 2 பேருக்கும் என கரோனா தொற்று 29 பேருக்குக் கண்டறியப்பட்டுள்ளன.
கரோனா தொற்று தமிழ்நாட்டில் தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் இருப்பதால் காய்ச்சல், சளி, இருமல் இருப்பவர்கள் உடனடியாக பரிசோதனை செய்யவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் சுகாதாரத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஒட்டன்சத்திரத்தில் 6.40 லட்சம் மரக்கன்றுகள் நட்டு ஓராண்டு நிறைவு..அமைச்சர் கேக் வெட்டி கொண்டாட்டம்..!