சென்னை: டெல்லியில் ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழா அணி வகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்தி மாதிரிகளை கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
மேலும், சுதந்திரப் போராட்டம், 75 ஆண்டு சாதனைகள் மற்றும் தீர்வுகள் என்ற தலைப்பில் அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் இடம்பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அணிவகுப்பில் இடம்பெறப் போகும் அலங்கார ஊர்திகளின் பட்டியலை தேர்வுக்குழு வெளியிட்டது. அதில் மகளிர் சாதனையாளர்கள், இந்தியா - 75 கருத்துக்கள் அடங்கிய தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்வு குழு அறிவித்துள்ளது.