சென்னை:தலைமைச் செயலகத்தில் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கடந்த ஆண்டு, ஜனவரி மாதத்திலிருந்து பெயர் நீக்கம், திருத்தம் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
வாக்காளர் அடையாள அட்டையில் ஏற்கனவே மூன்று விதமான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. க்யூஆர் கோடு, ஹோலோகிராம் போன்ற தொழில்நுட்பங்கள் ஏற்கனவே அதில் இடம் பெற்றுள்ளன. இப்போது, போலி அட்டைகளை உருவாக்க முடியாதபடி கூடுதலாக 3 பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் புதிய பாதுகாப்பு அம்சங்களும் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது குறித்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 16 லட்சம் வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.