தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரும் ஜூன் 13 முதல் 17 வரை சென்னையில் உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி! - Squash World Cup

ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்குவாஷ் போட்டியை சேர்க்க வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தை முன் வைத்து சென்னையில் ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன என தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

ஜூன் 13 முதல் 17 வரை சென்னையில் உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி!
ஜூன் 13 முதல் 17 வரை சென்னையில் உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி!

By

Published : May 22, 2023, 5:27 PM IST

வரும் ஜூன் 13 முதல் 17 வரை சென்னையில் உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி!

சென்னை:வரும் ஜூன் 13ஆம் தேதி முதல் ஜூன் 17ஆம் தேதி வரை உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செயலாளர் அதுல்யா மிஸ்ரா, உறுப்பினர் மற்றும் செயலாளர் மேக்நாத் ரெட்டி, இந்திய ஸ்குவாஷ் பயிற்சியாளர் சைரஸ் போன்சா (Cyrus poncha) இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்வதேச ஸ்குவாஷ் உலகக் கோப்பை வரும் ஜூன் 13 முதல் 17 வரை சென்னை EA மாலில் நடைபெற உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டார். மேலும், கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் சர்வதேச ஸ்குவாஷ் போட்டிகள் நடத்த ரூபாய் 1.5 கோடி நிதி ஒதுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதனை மையமாக வைத்து ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடருக்காக 1.50 கோடி ரூபாயின் காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்க தலைவர் ராமச்சந்திரனிடம் வழங்கினார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஸ்குவாஷ் உலகக் கோப்பையை சென்னையில் நடத்தும் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.

ஸ்குவாஷ் உலகக் கோப்பை தமிழ்நாட்டில் நடைபெறுவதால் இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை. தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பது அரசின் நோக்கம், அந்த வகையில் தான் இந்தப் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இந்திய அணியை இந்திய வீரர் சவுரவ் கோஷல் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் வழி நடத்த உள்ளனர்.

இதில் ஜப்பான், சீனா, எகிப்து, தென் ஆப்ரிக்கா, மலேசியா உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்குவாஷ் போட்டியைச் சேர்க்க வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தை முன் வைத்து இந்தப் போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள EA மாலில் இந்தப் போட்டிகள் நடைபெறும்" எனத் தெரிவித்து உள்ளார்.

பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்துப் பேசிய அவர், “அரசு சர்வதேச போட்டிகளை நடத்துவது வருவாய் நோக்கத்தில் இல்லை, விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மற்றும் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தான் நடத்தப்படுகின்றன’’ எனக் கூறினார். மேலும் ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் ஸ்குவாஷ் வீரர்களுக்கு தமிழ்நாடு அரசின் பணியிடங்களில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த யோசனை இருக்கிறதா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என அவர் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை - லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details