சென்னை:தமிழ்நாட்டில் தற்போது மின்சாரக் கட்டணம் அதிகளவில் உயர்ந்து வருகிறது. இதனால் தொழிற்சாலைகள் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு ஒரு முடிவு தெரிய வேண்டும் என பலரது மத்தியிலும் கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்த நிலையில், மின் கட்டண உயர்வைக் கண்டித்து வரும் திங்கட்கிழமை (செப்.25) தமிழக பள்ளி நிர்வாகங்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளி நிர்வாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தமிழ்நாடு முழுவதும் வருகின்ற திங்கட்கிழமை 25 ஆம் தேதி அனைத்து தொழில் நிறுவனங்களும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.
தொழிற்சாலைகளை காட்டிலும் அதிகமான மின் கட்டணம் தனியார் பள்ளிகளுக்கு உயர்த்தியுள்ளது. தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவனங்களிடம் மட்டும், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டு லட்சக்கணக்கில் வசூலித்து வருகிறார்கள்.
அரசு பள்ளி கல்லூரிகளுக்கு மின் கட்டண சலுகை தந்துவிட்டு, தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் இந்த நிலையா. இது ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும், மறு கண்ணிற்கு வெண்ணெய்யும் வைப்பது போல் உள்ளது. தனியார் பள்ளிகளை மட்டும் நசுக்கி வரும் தமிழக அரசுக்கு எதிராக இப்போராட்டம் நடைபெரும்.
நாமும் நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் நமது கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து வரும் செப்.25 ஆம் தேதி திங்கட்கிழமை போராட்டம் நடத்த உள்ளோம். தற்போது காலாண்டு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருவதால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கு விடுமுறை விடாமல், பள்ளி நிர்வாகிகள் மட்டும் கருப்பு பேட்ஜ் அணிந்து கல்வி கடமை ஆற்றுவோம்.
மேற்கண்ட செய்தியை அனைத்து ஊடகங்களிலும் சொல்லி அரசின் கவனத்தை ஈர்ப்போம், நமது மாநில சங்கத்தின் அனைத்து மாநில மாவட்ட தலைவர்கள் பள்ளி நிர்வாகிகள் உடனடியாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் தகவல் தந்து தவறாமல் கருப்பு பேட்ஜ் அணிந்து நமது கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு சென்று வெற்றி பெற ஆதரவளிக்க வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன்" மாநில பொதுச் செயலாளர் என கே.ஆர்.நந்தகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேபோல, அதே நாளில் போராட்டம் நடத்தும் தொழிற்சாலைகளும், தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த உள்ளதாக நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: எஸ்பிஐ வங்கியில் திடீர் தீ விபத்து! பணம், முக்கிய ஆவணங்கள் சேதமா?