தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் வேண்டுகோள்!

சென்னை: தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒன்றிய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் கே.ஆர் . பெரியகருப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்

By

Published : Jun 5, 2021, 6:37 AM IST

ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், "மாநில ஊரகப் பகுதிகளின் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து பணியாற்ற வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் பரப்புரையின்போது, தமிழ்நாட்டின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான 7 முக்கிய செயற்திட்டங்களை வெளியிட்டுள்ளார்.

இச்செயற்திட்டம் பொருளாதார வளர்ச்சி, வேளாண்மை, நீர் வளம், கல்வி, சுகாதாரம், ஊரக உட்கட்டமைப்பு மற்றும் சமூக நீதி ஆகியனவற்றை உள்ளடக்கியுள்ளது. மேலும், துணை முதலமைச்சராக இருந்தபோது அவர் தலைமையிலான உயர் நிலைக்குழு பல்வேறு பரிந்துரைகளை ஊரக உள்ளாட்சி அமைப்புகளை வலிமைப்படுத்துவதற்காக வழங்கியது.

அதனடிப்படையில் பல்வேறு அதிகாரப் பகிர்வு, நிதி பகிர்வு, நிர்வாகப் பகிர்வுகளை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கி அரசாணைகள், வழிகாட்டு நெறிமுறைகள், உத்தரவுகள் வழங்கப்பட்டன" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், " தமிழ்நாட்டில் ஊராட்சித் தொடர்பான மாதிரி மக்கள் சாசனத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வரும் நடைமுறையினைப் பின்பற்றி வருகின்றது.

இந்நிகழ்வில் ஒன்றிய அரசினால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி மக்கள் சாசனம் தமிழ்நாட்டின் தேவைக்கேற்ப ஏற்றுக்கொள்ளப்பட்டு, நடைமுறைப்படுத்தி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளை வலிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த சாசனத்தால் மக்கள், அரசு வழங்கும் பல்வேறு சேவைகளில் அவர்களது உரிமையினை நிலைநாட்ட முடியும். எனவே, ஊரக உள்ளாட்சி அமைப்புகளை வலிமைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒன்றிய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details