சென்னை:தமிழ்நாட்டில் செயல்படும் மாநிலப் பல்கலைக் கழகங்களுக்கான துணை வேந்தர்கள் நியமனம் செய்வதில் தமிழ்நாடு அரசிற்கும், ஆளுநருக்கும் இடையே சர்ச்சை நிலவி வந்தது. இந்த நிலையில் துணைவேந்தர்கள் நியமனம் குறித்து தமிழ்நாடு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரை ஆளுநர் அழைத்து பேச வேண்டும் என்றும், பேச்சுவார்த்தையின் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேச்சுவார்த்தைக்காக அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு ஆளுநர், பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் உள்ளார். துணைவேந்தர்கள் நியமனத்தில் சமீபத்தில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்து வெளியிடப்பட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது.
மேலும் தமிழ்நாடு அரசு புதியத் தேடுதல் குழுவை அமைக்கும் போது, நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு உட்பட்டு பல்கலைக்கழக மானியக்குழுவின் உறுப்பினருடன் குழுவை அரசு அமைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி 2023 செப்டம்பர் 6-ஆம் தேதி பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றிக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவினை அமைத்து அறிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசும், அதன் அதிகாரப்பூர்வ அரசிதழில் சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றிக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது. மேலும் இந்தக்குழு 3 பேர் கொண்ட பட்டியலை தேர்வுச் செய்து தமிழ்நாடு ஆளுநருக்கு அளிக்கும் எனவும் கூறியிருந்தது.