சென்னை: கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தரப்பில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்ட X பதிவில், 'ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு அரசின் அரசியல் சாசனத் தலைவர் மீது மிகக் கடுமையான தாக்குதல் இன்று மதியம் 2.45 மணிக்கு நடந்தது. ராஜ்பவன் மெயின் கேட் எண்.1 வழியாக பெட்ரோல் குண்டுகளை ஏந்திய மர்ம நபர்கள் சிலர் உள்ளே நுழைய முயன்றனர். இருப்பினும், உஷாரான காவலாளிகள் அவர்களுக்கு சவால் விடுத்து, அவர்கள் ராஜ்பவனுக்குள் நுழைவதைத் தடுத்தனர்.
ராஜ்பவன் பாதுகாப்பு அதிகாரிகள் உஷாராக இருந்ததால், இன்று பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ராஜ்பவனின் பிரதான நுழைவாயில் கேட்-1 -ல் முதல் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பிறகு, அது பெரும் ஒலியுடன் வெடித்து நுழைவாயிலை எரித்தது. பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து கைப்பற்றினர்.
ராஜ்பவனின் பாதுகாப்புப் பணியாளர்கள் தாக்குதலைக் கட்டுப்படுத்த முயன்றபோதும், குற்றவாளிகளால் மற்றொரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, இதன் விளைவாக ராஜ் பவனின் பிரதான நுழைவாயிலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. எப்படியோ, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை செக்யூரிட்டி பிடித்தனர்.
கடந்த பல மாதங்களாக ஆளுநரின் மீது அநாகரீகமான அத்துமீறல்களைப் பயன்படுத்தியும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தும் தொடர்ந்து கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன . ஆளுநருக்கு இந்த வாய்மொழி தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் பெரும்பாலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் அவர்களின் பொதுக் கூட்டங்களிலும், அவர்களின் சமூக ஊடகங்கள் மூலமாகவும் செய்யப்பட்டன. இந்த அச்சுறுத்தல்கள் ஆளுநரை மிகைப்படுத்தி, அவரது அரசியலமைப்புச் சட்டப் பணிகளைச் செய்வதில் அவரைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உள்ளன.