சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 5 நாட்களுக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையம் சார்பாகத் தெரிவிக்கும் போது, "இன்று (அக்.26) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிங்க:மழையில் இருந்து உங்கள் ஸ்மார்ட் போன்களை பாதுகாப்பது எப்படி?
அதே போல், 29ஆம் தேதி அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் ஆகிய 12 மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், 30ஆம் தேதி அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், விருதுநகர், தூத்துக்குடி, தேனி, மதுரை, நீலகிரி, மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அதிதீவிர புயலாக மாறிய 'ஹமூன்' - எந்தெந்த மாநிலத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு!
சென்னையைப் பொறுத்தவரை, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பாக அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழை அளவு: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, பெரியாறு (தேனி), கிளானிலை (புதுக்கோட்டை) தலா 6 செ.மீ மழைப்பதிவாகி உள்ளது. கள்ளந்திரி (மதுரை), அறந்தாங்கி (புதுக்கோட்டை) தலா 5 செ.மீ மழைப் பதிவாகி உள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:வலுவடையும் வடகிழக்கு பருவமழை.. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!