சென்னை:வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கும் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் அறிக்கையைத் தயாரித்தும் பணிகளைத் தீவிரப்படுத்தியும் உள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை சாசனம் ஒன்று வெளியிடப்பட்டது.
இது குறித்து பேசிய தமுஎகச-வின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, "தமிழ்நாட்டில் கருத்துச் சுதந்திரம் என்பது முற்றிலும் இல்லை. கருத்துச் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் வாக்குறுதி வழங்க வேண்டும்.
தற்போதைய காலகட்டத்தில் 11 மணிக்கு மேல் நிகழ்வுகள் நடத்த முடியாத சூழல் நிலவிவருகிறது. இதனால் நிகழ்த்துக் கலைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே நேரக் கட்டுப்பாட்டைத் தளர்த்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். மேலும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் கலை அரங்குகள் கட்டி குறைந்த வாடகைக்கு விட வேண்டும். சென்னையில் உள்ள விக்டோரியா அரங்கத்தை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும்.
அரசின் சார்பாக எழுத்தாளர்களுக்கு வழங்கும் விருதுகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும், தமிழ்நாட்டில் நாட்டுப்புற கலைகளுக்கான பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.