சென்னை:அதிக வட்டி தருவதாக கூறி ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.2,400 கோடி வசூலித்து, மோசடி செய்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன வழக்கு தமிழகத்தையே உலுக்கியது. இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பாஜக நிர்வாகி ஹரிஷ், மைக்கேல் ராஜ் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துபாய் நாட்டில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும், நிறுவன இயக்குநர் ராஜசேகர் உட்பட பலரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குறிப்பாக, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மோசடி செய்த பணத்தில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்கள், ஆவணங்கள், நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், இதுவரை ரூ.100 கோடி மதிப்பிலான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி விவகாரத்தில் ரூ.6 கோடி பணம், 4 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கைதானவர்களிடம் இருந்து பல கோடி மதிப்புள்ள 130 சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ஏஜென்ட்கள் முக்கிய பங்காற்றி இருப்பது தெரியவந்துள்ள நிலையில், இதுவரை 256 ஏஜென்ட்கள் கண்டறியப்பட்டு அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணிகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.