சென்னை : தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பால் வளத்துறை அமைச்சர் நாசர் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அதேபோல் தமிழ்நாடு அமைச்சரவையில் முதல்முறையாக டி.ஆர்.பி ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. மன்னார்குடி எம்.எல்.ஏ.வான டி.ஆர்.பி ராஜா வரும் 11ஆம் தேதி அமைச்சராக பதவியேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் நிகழ உள்ளதாக கடந்த சில நாட்களாக கூறப்பட்டது. அதேநேரம் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு இருப்பதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன.
இருப்பினும், இது தொடர்பான தகவல்கள் காற்றுவாக்கிலேயே இருந்தது. இந்த பரபரப்பான சூழலில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து இதுதொடர்பாக பேச இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால், அதை அமைச்சர் துரைமுருகன் மறுத்தார்.