சென்னை : இன்று மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியரின் ஈகை திருநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: "அண்ணல் நபிகளாரின் நற்போதனைகளில் இருந்து வழுவாமல் வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த மிலாடி நபி நன்னாள் நல்வாழ்த்துகள். என்றைக்கும் சிறுபான்மையின மக்களின் உற்ற தோழனாக - உரிமைப் பாதுகாவலனாக விளங்குவது திமுக அரசுதான். அரசு வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இஸ்லாமியருக்கு மூன்றரை விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை நல்கி, தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்களின் நலன் காத்து நிற்கிறது" என்று தெரிவித்து உள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி :"அன்பு இருந்தால் தான் பிறர்க்கு உதவ முடியும் என்பதனை உறுதியாக நம்பி, அதன்படி வாழ்ந்து காட்டிய அண்ணல் நபிகள் நாயகம் போதித்த நல்வழிகளைப் பின்பற்றி, எங்கும் அமைதி நிலவிடவும், சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும், அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட உறுதியேற்போம். இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில், எனது உளமார்ந்த மிலாடி நபி வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் : "அன்பு, நட்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை, எதிரிகளை மன்னிக்கும் பெருந்தன்மை ஆகியவை வளர்வதற்கும், அனைத்து நலன்களும், வளங்களும் பெருகவும் உழைக்க வேண்டும் என்று நபிகள் அவதரித்த இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்" என்று கூறி உள்ளார்.