குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரை சென்னை:செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் உலகளாவிய திறமைகளை ஈர்க்கும் நிறுவனமாக இந்த பல்கலைக்கழகத்தை வலுப்படுத்த முடியும். நாடும் உலகமும் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு கற்றல் அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் சென்னைப் பல்கலைக்கழகம் முன்னணியில் இருக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வலியுறுத்தினார்.
சென்னை பல்கலையின் 165 ஆவது பட்டமளிப்பு விழா கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தின் விவேகானந்தர் அரங்கில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த ஒரு லட்சத்து 4ஆயிரத்து 416 பேர் பட்டங்களை பெற தகுதிப்பெற்றனர். அவர்களில் 564 பேர் முனைவர் பட்டம் பெற்றனர். இலக்கிய ஆராய்ச்சி படிப்பில் பட்டம் பெறவுள்ள ஒருவரும் பட்டம் பெற்றனர்.
முனைவர் பட்டம், பதக்கம் மற்றும் பரிசு வென்ற 197 பட்டதாரிகளுக்கு பட்டங்களையும், பரிசுகளையும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார். முனைவர் பட்டத்தை தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம், தாெழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன், நிறுவன வருமான வரியின் விதிப்பும் அதன் தாக்கமும் என்ற தலைப்பில் ஆராய்ச்சி பட்டத்தை வணிகவரித்துறை உதவி ஆணையர் சங்கர்கணேஷ் உள்ளிட்டவர்கள் பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றி பேசிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, "சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பதக்கம் வென்றவர்களுக்கும், இன்று பட்டம் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெருமைமிகு பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது அவர்களுக்கும் மகிழ்ச்சியான தருணமாகும்.
தமிழ்நாடு நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் பிறப்பிடமாக இருந்து வருகிறது. சங்க இலக்கியத்தின் செழுமையான இந்தியாவின் மரபுகள் இந்தியாவின் மதிப்புமிகுந்த பாரம்பரியத்தை கொண்டுள்ளன. திருக்குறளில் உள்ள அறிவு பல நூற்றாண்டுகளாக நம் அனைவரையும் வழிநடத்தி வருகிறது. கவிதையின் பெரும் பக்தி சார்ந்த மரபு தமிழ்நாட்டில் தான் தொடங்கியது. அந்த மரபுகள், இடம் பெயர்ந்து சென்ற துறவிகளால் வடக்கே சென்றது.
தமிழ்நாட்டின் கோயில் கட்டிடக்கலை, சிலைகள் மற்றும் சிற்பங்கள் மனிதத் திறமைக்கு எடுத்துக்காட்டாகவும், மரியாதைக்குரியதாகவும் இருக்கின்றன. இது போல் நம்மிடம் உள்ள அளப்பரிய, வளமான கலாச்சார பாரம்பரிய பெருமிதங்களுடன், இளம் மாணவர்கள் 21 ஆம் நூற்றாண்டின் உலகளாவிய அறிவுச் சமூகத்தின் முக்கியமான குடிமக்களாக மாற வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் சுமார் 1,85,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் மாணவிகள் படிக்கின்றனர். இன்று தங்கப் பதக்கம் பெற்ற 105 மாணவர்களில் 70 விழுக்காடு மாணவிகள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னைப் பல்கலைக்கழகம் பாலின சமத்துவத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. பெண் குழந்தைகளின் கல்வியில் முதலீடு செய்வதன் மூலம், நம் நாட்டின் முன்னேற்றத்தில் முதலீடு செய்கிறோம். படித்த பெண்களால் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவதற்கு அதிக பங்களிப்பை வழங்க முடியும். பல்வேறு துறைகளில் தலைமைத்துவத்தை வழங்குவதுடன், சமூகத்தில் இணகத்தையும் ஏற்படுத்த முடியும்.
1857-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சென்னை பல்கலைக்கழகம் இந்தியாவின் பழமையான நவீன பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இப்பல்கலைக்கழகம் அறிவைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. இது சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாக இருந்து வருகிறது.கடந்த 165 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை பல்கலைக்கழகம் உயர்தர கல்வியை வழங்கி வருகிறது.
மேலும், அறிஞர்களையும், தலைவர்களையும், தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களையும் உருவாக்கி, கல்வியின் புகலிடமாக இருந்து வருகின்றது. இந்த பல்கலைக்கழகம் ஒரு கலங்கரை விளக்கமாகவும் செயல்பட்டு, தென் பிராந்தியத்தில் பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் உருவாக்கத்திலும், முன்னேற்றத்திலும் முக்கிய பங்காற்றி வருகிறது.
சென்னை பல்கலைக்கழகம் வளமான வரலாறு மற்றும் புகழ்பெற்ற பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவின் 6 முன்னாள் குடியரசுத்தலைவர்கள் இப்பல்கலைக்கழகத்தின் மாணவர்களாக இருந்து, இன்று நீங்கள் நடந்து செல்லும் அதே நடைபாதைகளில் நடந்தனர் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்.
இப்பல்கலைக்கழகத்தின் எனது முன்னோடிகளான டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர்.வெங்கட்ராமன், கே.ஆர்.நாராயணன் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோரை மரியாதையுடன் நினைவு கூர்கிறேன். இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றிய புகழ்பெற்ற சுதந்திரப்போராட்ட வீரர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் ஆவார்.
இப்பல்கலைக்கழகத்தின் மாணவர்களான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் மற்றும் டாக்டர் எஸ்.சந்திரசேகர் ஆகியோர் அறிவியல் உலகிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.பதஞ்சலி சாஸ்திரி, நீதிபதி கே.சுப்பாராவ் ஆகியோர் நீதித்துறையை வளப்படுத்தியுள்ளனர். உங்கள் பல்கலைக்கழகம் இத்தகைய சிறந்த மனிதர்களை உருவாக்கியுள்ளது என்ற எண்ணமே, கற்றல் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சிறந்து விளங்குவதற்கு உங்களை கடுமையாக பாடுபடத்தூண்டும்.
இந்தியாவின் கவிக்குயில் என போற்றப்படும் சரோஜினி நாயுடு மற்றும் உறுதி மிக்க துர்காபாய் தேஷ்முக் ஆகியோரின் நினைவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். அவர்களும் இப்பல்கலைக்கழக மாணவர்கள்தான். அந்த இரண்டு மகத்தான பெண்களும் தங்கள் காலத்தை விட மிகவும் முன்னேறியிருந்தனர். அவர்கள், பல தலைமுறை இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்த மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் உன்னதமான பெண்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களும், குறிப்பாக மாணவிகள் அவர்களது தனித்துவமான கதைகளிலிருந்து உத்வேகம் பெற வேண்டும்.
சென்னைப் பல்கலைக்கழகத்தை உலகளாவிய சிறப்பு மையமாக முன்னேற்றுவதில் முன்னாள் மாணவர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்க முடியும். பல்கலைக்கழகம் அவர்களின் வெற்றிக்கு பல வழிகளில் பங்களித்துள்ளது, எனவே அவர்கள் தங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கு கைமாறு செய்ய முயற்சிக்க வேண்டும். முன்னாள் மாணவர்கள், இளம் மாணவர்களுக்கு வழிகாட்டலாம். பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்திற்காக முன்னாள் மாணவர்களை அணுகி அவர்களின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும்.
உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நீங்கள் தொடங்கும்போது, உங்கள் இலக்குகளை உயர்வாக அமைக்குமாறு நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன், ஆனால் அதே நேரத்தில், உங்கள் இலக்குகளால் நிர்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். உங்கள் கனவுகளை உறுதியுடனும் அச்சமின்றியும் நிறைவேற்ற கடினமாக உழைக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையிலும் தொழில் அமைப்பிலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியதற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கும் நாட்டிற்கும் மிகவும் பிரகாசமான எதிர்காலத்தை உங்களால் உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன். எதிர்காலம் உங்களுக்கே சொந்தம்” என பேசினார்.
இதையும் படிங்க:மாணவர்கள் உயர்ந்தால் குடும்பம், மாநிலம், நாடு உயரும் - ஆளுநர் ஆர்.என். ரவி!