ஈபிஎஸ் கருத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி சென்னை:மத்திய அரசு சார்பில் நடைபெற்ற பள்ளி சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய தூதுவர் திட்ட கருத்தரங்கில் சிறந்த ஒருங்கிணைப்பு செயல்முறை மாநிலம், மற்றும் சிறந்த மாதவிடாய் விழிப்புணர்வு விருதுகள் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டது. மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட விருதுகளை, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம், மக்கள் நால்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு இயக்குநர் ஷில்பா பிரபாகர் ஆகியோர் வழங்கினர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மத்திய அரசின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற பள்ளி சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய தூதுவர் திட்ட கருத்தரங்கில், சிறந்த ஒருங்கிணைப்பு செயல்முறை விருது தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து ஆரோக்கிய தூதுவர் திட்டம் மூலம் 70 ஆயிரம் ஆசிரியர்கள், 41 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ - மாணவியர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அரைவேக்காட்டுத்தனம்:அதேபோல் சிறந்த மாதவிடாய் விழிப்புணர்வு விருதும் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் விழிப்புணர்வு விளம்பரத்தின் மூலம் 43 லட்சம் இளம்பெண்கள் பயனடைந்துள்ளதால் தமிழ்நாட்டிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட மத்திய அரசு விருதுகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மருத்துவத்துறை ஊழியர்கள் கடுமையாகப் பணியாற்றி வரும் நிலையில் திட்டத்தை சரியாக தெரிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத்தனமாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அறிக்கை விட்டுள்ளார்’’ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் மக்களைத் தேடி மருத்துவம்: ’எடப்பாடி பழனிசாமி விரும்பினால் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயன்பெற்ற 1 கோடி பயனாளிகள் பட்டியலை வழங்க தயார், அவர் எப்போது வேண்டுமானாலும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு வந்து பட்டியலை பார்த்துக் கொள்ளலாம்.
மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் குறித்து ஏற்கனவே 4 மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையை அச்சு மாறாமல் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இந்த மருத்துவத் திட்டம் இந்தியா முழுவதும் பாராட்டுகளை பெற்றுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இந்த திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அரசியல்வாதி செல்லாத இடத்தில் கூட மக்களைத் தேடி மருத்துவம்:இதுவரை மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடி பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என்றும்; இந்த திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 முறை நேரடியாக வருகை தந்து பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கியதாகவும் குறிப்பிட்டார். காடு, மலை, கிராமம் என 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த திட்டத்தில் பணியாற்றி வருவதாகவும், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் நேரடியாக செல்லாத இடத்திற்கு கூட திட்டம் சென்றதாகவும், அதை நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டதாகவும் கூறினார்.
மருத்துவத்துறை ஊழியர்கள் பலர், கடுமையாகப் பணியாற்றி வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை சரியாக தெரிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத் தனமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறினார். மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பழுதடைந்த உபகரணங்களை மாற்றி, புது உபகரணங்கள் வாங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
செவிலியர்கள் நியமன ஆணை:புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் விவகாரத்தை மாவட்ட ஆட்சியர் சிறப்பாக கையாண்டு வருவதாகவும், கிராம மக்களுக்கு புதிய தண்ணீர் தொட்டி கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சரியான நடவடிக்கை எடுக்கும் என்றும்; சாதியப் பாகுபாடுகளை ஒழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றார்.
மருத்துவத்துறையில் சித்த மருத்துவம், ஹோமியோபதி உள்ளிட்ட 130 மருத்துவர்கள் பணிகளுக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் நாளை(ஜன.20) வழங்க உள்ளதாகவும், கரோனா காலத்தில் பணியாற்றிய தற்காலிக ஒப்பந்த செவிலியர்களுக்கு 20 நாட்களில் பணி ஆணைகள் மாவட்ட நிர்வாகம் தரப்பில் வழங்கப்படும் எனவும்; போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களாக இருந்தாலும், அரசிற்கு எதிராக அவதூறு பரப்பியவர்களாக இருந்தாலும் யாரும் பழிவாங்கப்படாமல் பணி நியமனம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் யார்.? - ஜி.கே.வாசன்