சென்னை:புதுடெல்லியில் 13வது தேசிய உறுப்பு கொடை தினத்தில் ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவிடம் இருந்து தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சை நிறுவனத்தால் உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறந்த செயல்பாட்டிற்கான இந்திய அளவில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற விருதினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்காெண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''National Organ and Tissue Transplantation Organization (NOTTO) எனும் அமைப்பின் மூலம் 13வது இந்திய உறுப்பு தான தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியா முழுமைக்கும் உறுப்பு தான சிகிச்சைகள், மாற்று சிகிச்சைகள் அதே போல் அதற்கான விழிப்புணர்வு போன்ற பல்வேறு விஷயங்களில் சிறப்பாக செயல்படுகிற மாநிலங்கள் மற்றும் தனி மனிதர்கள், அமைப்புகள் என்று பல தரப்பட்டவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்திய அளவில் உறுப்பு தானத் திட்டத்தில் சிறப்பான செயல்பாட்டிற்காக சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து State Organ and Tissue Transplantation Organization (SOTTO) என்ற விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு, ஏற்கனவே கடந்த காலங்களில் பெற்றிருந்த இந்த சிறப்புக்குரிய தகுதியைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வைத்துள்ளது.
இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் 2008ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பகுதியில் ஜித்தேந்திரன் என்ற மாணவன் ஒருவன் சாலை விபத்தில் மரணம் அடைந்த நேரத்தில் அவருடைய உறுப்புகளை பெற்றோர்கள் மனம் உகந்து உறுப்பு தானம் செய்தனர். அதனைத் தாெடர்ந்து 2008 செப்டம்பர் மாதம் மூளைச்சாவு அடைந்தவர்களிடத்திலிருந்து உறுப்புகளை பெற்று அதன் மூலம் மற்றவர்களுக்கு பொருத்துகிற அந்த மகத்தான திட்டத்தை அறிவித்து, தமிழ்நாடு அரசின் மூளைச் சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் என்கின்ற ஒரு திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கினார். அந்த திட்டமானது தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையமாக உருவாக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே, இந்த அரசு அமைவதற்கு முன் 13 அரசு மருத்துவமனைகளில் மட்டுமே ஆர்கன் ஆர்வஸ்ட் லைசன்ஸ் (Organ Harvest License) இருந்தது. தனியார் மருத்துவமனைகளை பொறுத்தவரை 120 மருத்துவமனைகளில் இந்த ஆர்கன் ஆர்வஸ்ட் லைசன்ஸ் பெற்றிருக்கின்றனர். கோயம்புத்தூரில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு, 27 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் 1 மாதத்தில் ஆர்கன் ஆர்வஸ்ட் லைசன்ஸ் பெற்றுத் தரப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் 40 அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளிலும், 120 தனியார் மருத்துவமனைகளிலும் இந்த Organ Harvest License உள்ளது.
இந்தியாவிலேயே உறுப்பு தானம் அதிகமாக பெறக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இப்படி மிகச் சிறப்பான கட்டமைப்பினை பெற்றிருக்கிற காரணத்தினாலும், தொடர்ந்து இதய மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, கணையம் மாற்று அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, கருவிழி மாற்று அறுவை கிச்சை, தோல் மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மாற்று அறுவை கிசிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை என்று பல வகைகளில் உறுப்பு மாற்று அறுவை கிச்சைகள் தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.