சென்னை தலைமைச் செயலகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள், தலைமைச் செயலாளர் இறையன்புவைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமீமுன் அன்சாரி, “எதிர் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி பிறந்த தினத்தில் தமிழ்நாட்டில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி நடத்த சில நிபந்தனைகளோடு உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளனர்.
காந்தியை சுட்டுக்கொன்ற கலாச்சாரத்துக்கு சொந்தக்காரர்கள், காந்தி பிறந்தநாளில் பேரணி நடத்துவது நடைமுறைக்கு முரணானது. தமிழ்நாட்டில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒரு தாய் மக்களாக, மாமன் மச்சானாக வாழும் நிலையில், சமூக நல்லிணக்கத்தை, பாரம்பரிய மரபுசார் ஒற்றுமைகளை, பாலடிக்கும் முயற்சியாக அக்டோபர் 2 பேரணியை பார்க்கிறேன்.