டெல்லி:தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு அனுமதி வழங்கக் காலம் தாழ்த்துவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது. தமிழக சட்டசபை மற்றும் அரசால் அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் அரசாணைகளை அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "தமிழ்நாடு அரசு இந்திய அரசியல் அமைப்பின் 32வது பிரிவின் படி தமிழக ஆளுநர் மீது வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது. இந்திய அரசியல் அமைப்பு 32வது பிரிவு என்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறிச் செயல்படுவது, செயலற்ற தன்மை, புறக்கணிப்பு மற்றும் தாமதம் போன்ற செயல்களில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களைத் தமிழக ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி அதனைப் பல மாதங்களாக நிலுவையில் வைத்து இருப்பது இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது, சட்டவிரோதமானது, தன்னிச்சையானது, நியாயமற்றது மற்றும் தவறான அதிகாரத்தைப் பயன்படுத்துவது ஆகும். மேலும் தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றிய 12 மசோதாக்கள் தமிழக ஆளுநர் ஒப்புதல் அனுப்பிப் பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாகத் தமிழக ஆளுநர் கையெழுத்திடாமல் வைத்து இருக்கும் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குற்றங்கள் மீதான விசாரணை மற்றும் விசாரணைக்கான அனுமதி தொடர்பான மசோதா, பல வருடங்களாகச் சிறையில் இருக்கும் கைதிகளில் முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பான மசோதா, தினசரி மனுக்கள், பணி நியமன ஆணைகள், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது, உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுவது போன்ற மசோதாக்கள் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் பல மாதங்களாக இவை நிலுவையில் உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசின் ஒட்டு மொத்த நிர்வாகமும் முடங்கியுள்ளது. மேலும் தமிழக ஆளுநர் மாநில அரசு நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்காமல் விரோத மனப்பான்மையுடன் செயல்படுவதாகவும். எனவே "தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாக்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழக ஆளுநர் அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறப்பட்டுள்ளது.
திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் கூறும் போது, ஆளுநர் ஆர்.என்.ரவி தனது இந்திய அரசியல் அமைப்புகளை மீறிச் செயல்படுகிறார் எனக் குற்றம்சாட்டினார். மேலும், அரசியலமைப்பைக் கேலி செய்கிறார். தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் ஆளுநர் மசோதாக்களைப் பெற்றுக் கொண்டு பல மாதங்களாகக் கிடப்பில் போட்டுள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அன்று (அக்.28) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து 15 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அனுப்பியுள்ளார். மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும் போது தமிழக ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் தமிழ்நாடு மக்களுக்கு எதிரானது எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"குஜராத் முதலமைச்சராக மாநில உரிமை குறித்து பேச்சு.. பிரதமரானதும் மாநில சுயாட்சிக்கு எதிர்ப்பு" - ஸ்பீக்கிங் பார் இந்தியா குரல்வழிப் பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி!