சென்னை:தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்துகொண்டனர். இதனால் ஆன்லைன் சூதாட்டங்கள் குறிப்பாக ஆன்லைன் ரம்மி எனப்படும் சீட்டுக்கட்டு விளையாட்டுக்குத் தலை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 'ஆன்லைன் சூதாட்ட தடை, ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசரச் சட்ட மசோதா' உருவாக்கப்பட்டு அமைச்சரவையில் ஒப்புதலை பெற்றது. பின்னர், 2022 அக்டோபர் 19-ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
ஆனால் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்த ஆளுநர், 131 நாட்கள் கழித்து மார்ச் 6ஆம் தேதி மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பினார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த செயலுக்கு திமுக, பாமக, விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மாதம் இரண்டாவது முறையாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடும் நபருக்கு மூன்று மாதம் சிறைத் தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தனி நபர் தீர்மானம் கொண்டு வந்திருந்த நிலையில் திடீரென ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் விவகாரம் வெளியே வந்துள்ளது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
இதனிடையே, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 23-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளது தாமதமான முடிவு என்றாலும், அப்பாவி மக்களின் உயிரிழப்புகளைத் தடுக்கும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆளுநரின் அதிகாரத்தை குறைக்க தனி தீர்மானம்.. அதிரடியில் இறங்கிய மு.க.ஸ்டாலின்!