சென்னை:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசு மருத்துவக் கல்வியையும், மருத்துவச் சேவையையும் இந்துத்துவமயமாக்கும் காவி மயமாக்கும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவை இந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறது. அதைச் செய்வதற்காக மருத்துவக் கல்வியிலும், மருத்துவத் துறையிலும் 'இந்துத்துவா' கருத்துக்களை திணித்து வருகிறது. நவீன அறிவியல் மருத்துவத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளை மூர்க்கத்தனமாக மேற்கொள்கிறது. மருத்துவத்தில் மூட நம்பிக்கைகளையும், அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களையும் திணிக்கிறது.
’இந்து இந்தியா’
'இந்தியா என்பது இந்து நாடு, அதன் கலாச்சாரம் இந்துக் கலாச்சாரம். இந்துக் கலாச்சாரத்தின் மருத்துவ முறை ஆயுர்வேதா’ என்ற அடிப்படையில் ஆயுர்வேத மருத்துவத்தை ஊக்கப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு செய்கிறது. ஆனால், உண்மையில் ஆயுர்வேதாவிற்கும் இந்து மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஆனால், இப்பொழுது தனது `இந்துத்துவா' என்ற மதவெறி அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்காக, ஆயுர்வேதாவை இந்து மருத்துவ முறையாக, இந்து மதத்தின் பண்பாட்டுக் கூறாக மாற்ற மோடி அரசு முயல்கிறது. ஒன்றிய பாஜக அரசு ஆயுர்வேதாவை ஊக்கப்படுத்துவதாக கூறிக்கொண்டு, அறிவியலுக்குப் புறம்பான போலி அறிவியலையும், மூட நம்பிக்கைகளையுமே ஊக்கப்படுத்துகிறது.
ஒரே தேசம், ஒரே மருத்துவமுறை
மருத்துவத்தை, மருத்துவக் கல்வியை இந்துத்துவ மயமாக்கும் நோக்குடன்தான் மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கை 2020, தேசிய நலக் கொள்கை 2017 போன்றவற்றை நடைமுறைப்படுத்துகிறது. 'ஒரே தேசம், ஒரே மருத்துவ முறை’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்கிறது. நவீன அறிவியல் மருத்துவத்திற்கு எதிராக செயல்படும் பாபா ராம் தேவ் போன்ற பெருநிறுவன சாமியார்களுக்கு துணை நிற்கிறது. அவர்களது நிரூபணமாகாத மருத்துவ முறைகளையும், மருந்துகளையும் ஊக்கப்படுத்துகிறது.
இந்நிலையில், இந்திய மருத்துவச் சங்கம் நவீன அறிவியல் மருத்துவத்திற்கு எதிரான மத்திய அரசின் போக்கையும், மிக்ஸோபதியையும் (Mixopathy) எதிர்த்து வருகிறது. நவீன அறிவியல் மருத்துவத்திற்கு எதிரான பாபா ராம்தேவின் கருத்துக்களையும் எதிர்த்துப் போராடி வருகிறது. இத்தகையச் சூழலில், இந்திய மருத்துவச் சங்கத்தின் தேசியத் தலைவராக டாக்டர் ஜெயலால் பதவி வகித்து வருகிறார். அவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதோடு, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இந்திய மருத்துவச் சங்கத்தின் போராட்டத்தை, மத அடிப்படையில் உள் நோக்கம் கற்பிக்கும் முயற்சியில் சங் பரிவார அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இது கடும் கண்டனத்திற்குரியது.